உலக சினிமா: சோட்ஸி *

யுகன்

அன்பிற்கு ஏங்கும் மனம்

சோட்ஸி என்னும் இளைஞன் ஒரு கேங்க் லீடர். நான்கு பேர் கொண்டது அவன் குழு. ஒரு நாள் ரயில் பயணி ஒருவரிடம் கத்தியைக் காட்டிப் பணம் தருமாறு மிரட்டுகிறார்கள். பயணி பணம் கொடுக்க மறுக்க குழுவில் ஒருவன் அவரைக் கத்தியால் குத்திவிடுகிறான். பயணி இறந்துவிடுகிறார். பணத்தை எடுத்துக்கொண்டு இந்தக் கும்பல் இறங்கிவிடுகிறது.
குழுவில் டீச்சர் பாய் என்றழைக்கப்படுபவன் அச்சம்பவம் குறித்து சோட்சியைக் கடுமையாகப் பேசுகிறான். கோபம் கொண்ட சோட்சி அவனைப் பலமாக அடிக்கிறான். பின் கோபத்துடன் வெளியேறுகிறான்.
அப்போது ஒரு பெண் காரை நிறுத்திவிட்டு கேட் கதவைத் திறக்கப் போன வேளையில் சட்டெனப் போய் காரை எடுக்கிறான். குறுக்கிட்ட அந்தப் பெண்மணியைச் சுட்டுவிட்டுக் காரில் விரைகிறான். காரில் போய்க் கொண்டிருக்கும்போது குழந்தை அழுகுரல் கேட்கிறது. அதன் பின்தான் காருடன் கைக்குழந்தையையும் கடத்திவிட்டோம் என்பதை உணர்கிறான். தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு காரை ரோட்டில் விட்டுவிட்டுக் கிளம்ப முயல்கிறான். குழந்தையின் வீறிட்ட அழு குரல் அவனைத் தடுக்கிறது.
சிறு வயதில் நோயில் படுத்த படுக்கையாய் இருந்த தாய், தந்தையின் அன்பற்ற நட்த்தை இவற்றால் வீட்டை விட்டு வெளியேறித் தெருவில் வளந்ததை நினைத்துப்பார்க்கிறான். அது போன்ற நிலை குழந்தைக்கு வரக் கூடாதென்று நினைத்துக் குழந்தையைத் தூக்கிச் செல்கிறான்.
ஆனால் அவனால் குழந்தையைச் சரியாக வளர்க்க முடியவில்லை. அதே தெருவில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் வாழ்பவள் மரியம். அவள் வீடு தேடிச் சென்று துப்பாக்கி முனையில் பால் கொடுக்கச் செய்கிறான்.
இன்னொரு முறை போகும்போது குழந்தை இங்கேயே இருக்கட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறாள். குழந்தையை மரியம் கொஞ்சும்போது தனக்கு இது போன்ற தாய்ப்பாசம் கிடைக்கவில்லையே என ஏங்குகிறான். கிளம்பும்போது இது என் குழந்தை ஜாக்கிரதை என்கிறான்.
குழந்தை அவனிடம் வந்த கொஞ்ச நாட்களில் அவன் வாழ்க்கை முறையே மாறிவிடுகிறது.
தன் குழுவில் இருக்கும் டீச்சர் பாயைத் தொடர்ந்து படிக்கவைப்பதற்காகப் பணம் திருடலாம் என முடிவெடுக்கின்றனர். குழந்தையின் வீட்டுக்குப் போகிறார்கள். குழந்தையின் அப்பாவைக் கட்டிப்போட்டிவிட்டு ஆளுக்கொரு திசையில் போகின்றனர்.
ஒரு அறைக்குள் நுழைந்த சோட்சி அங்கே நூற்றுக்கணக்கான பொம்மைகளைக் கண்டு அக்குழந்தை எவ்வளவு வசதியுடன் வாழ்ந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்கிறான். குழந்தையாக மாறி நெடுநேரம் அந்த அறையை ரசித்தபடி இருக்கிறான்.
பின் பணத்தைக் கொள்ளையடிக்காமல் குழந்தைக்குத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொள்கிறான்.
கட்டிப் போடப்பட்டிருக்கும் குழந்தையின் அப்பா அலாரத்தை அழுத்துகிறார். கோபமடைந்த சோட்ஸியின் நண்பன் அவரைச் சுடப்போகிறான். அதற்குள்  சோட்ஸி நண்பனைச் சுட்டு வீழ்த்துகிறான் குழந்தையின் தந்தை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க அங்கிருந்து தப்புகிறான்.
அன்று இரவு மரியம் வீட்டிற்கு வருகிறான். குழந்தை விஷயம் எனக்குத் தெரியும் நியூஸ் பேப்பரில் பார்த்தேன் என்கிறாள். அக்குழந்தையைத் ஒப்படைத்துவிடு என்கிறாள். குழந்தையை ஒப்படைத்த பிறகும் நான் வீட்டுக்கு வரலாமா என்கிறான். மௌனமாகத் தலையசைக்கிறாள்.
குழந்தையை ஒப்படைக்கப் போகிறான். வாசலில் வைத்துவிட்டுப் போக மனமில்லாமல் பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டுப் போகலாம் என்று காத்திருக்கும் அந்தச் சிறிய இடைவேளையில் அங்கே வந்த போலிசார் அவனைச் சுற்றி வளைக்கின்றனர். குழந்தையைக் கண்ணீர் மல்க ஒப்படைத்துவிட்டுச் சரணடைகிறான்.
தான் இழந்துவிட்ட இனிய குழந்தைப் பருவத்தை அந்தக் குழந்தையும் இழந்துவிடக் கூடாதென்ற் நினைக்கிறான் சோட்சி. அன்பிற்கு ஏங்கும் அவனது மனம் காட்சிகளால் உணர்த்தப்படும் விதமே இப்படத்தை உயர்வான இடத்திற்கு இட்டுச் செல்கிறது. படத்தின் அற்புதமான பின்னணி இசை வியப்பூட்டுகிறது.
2005இல் வெளிவந்த இந்த்த் தென்னாப்பிரிக்கப் படத்தின் இயக்குநர் கெவின் ஹீட். சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற படம் இது.

*

சென்னையின் சிலைகள்

சிலைகளைத் தேடி

யுகன்

அகில இந்திய வானொலியில் பணிபுரியும் என் நண்பர் ஒரு நாள் எனக்கு போன் செய்து சென்னையில் உள்ள சிலைகள் பற்றி ஒரு நிகழ்ச்சி செய்யப்போகிறோம், அதற்கு எழுதித் தர முடியுமா என்றார். தாரளமாக என்றேன். என்னோடு சேர்த்து நான்கு பேரை அவர் இந்தப் பணியில் ஈடுபடுத்தினார். சென்னையை நான்கு பகுதியாகப் பிரித்து ஆளுக்கு 10 இடங்களைப் பிரித்துக் கொடுத்தார்.

சிலைகள் என்றதும் எனக்கு மெரீனா கடற்கரைதான் நினைவுக்கு வந்தது. உழைப்பாளர் சிலை, அவ்வை, கண்ணகி, பாரதி, காந்தி, காமராஜர் என அங்கேதான் எத்தனை சிலைகள்… ஆனால் எனக்குத் திருவல்லிக்கேணி கிடைக்கவில்லை. வடபழனி, கோடம்பாக்கம், நந்தனம், தி. நகர் ஆகிய பகுதிகள்தான் கிடைத்தன.

இங்கெல்லாம் சுற்றித் திரிந்து சிலைகளைக் கண்டுபிடிப்பது எளிதான வேலையாக இருக்கும் என்று நினைத்துதான் தொடங்கினேன். தொடங்கிய பிறகுதான் அது எவ்வளவு சிரமமென்பதை உணர்ந்தேன். முதல் நாள் வளசரவாக்கம், வடபழனி எனச் சுற்றினேன். சிலை எதுவும் கண்ணில் படவில்லை. இங்கே பக்கத்தில் சிலை எதாவது இருக்கிறதா என்று முகவரி விசாரிப்பதுபோல யாரிடமாவது கேட்பதற்கும்  கூச்சமாக இருந்தது. மௌனமாகத் தேடி அலைந்தேன். முதல் வார முடிவில் நான் கண்டறிந்தது சென்னையில் உள்ள அனைவரும் நன்கறிந்த கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை, நந்தனம் தேவர் சிலை, தி. நகர் கண்ணதாசன் சிலை இவ்வளவுதான்.

இடையில் வெவ்வேறு வேலைகள் வந்துவிட்டதால் சிலை வேலை தடைபட்டது. ஒரு நாள் அண்ணா ஆர்ச் அருகே உள்ள சிக்னலுக்காக வண்டியில் காத்திருந்தேன். வெகு நேரமாய் நிற்க வைத்து சோதித்துக்கொண்டிருந்தார்கள். தற்செயலாய் அண்ணா ஆர்ச் பக்கம் பார்த்தேன். அங்கே இருந்த மரத்தின் கிளை லேசாக அசைய, சட்டென வெளிப்பட்டது அங்கிருந்த அண்ணாவின் சிலை. இவ்வழியாக எத்தனை முறை வந்திருக்கிறேன் ஆனால் சிலை கண்ணில் படவில்லையே என நினைத்தேன்.

சிலைகள் இப்படி என்னோடு கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தபோது
வானொலி நண்பரிடமிருந்து நினைவூட்டல் அழைப்பு வந்தது. என் சிரமத்தைப் புரிந்துகொண்டவர் சில சிலைகளையும் குறிப்பிட்டு வேலையை விரைவாக முடித்துக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த வேலையை இன்று முடித்தே ஆக வேண்டுமென்ற வெறியுடன் ஒருநாள் கிளம்பினேன். நுங்கம்பாக்கத்தில் உள்ள அண்ணா சிலை, காமராஜர் நினைவகத்தில் உள்ள காமராஜர் சிலை, என்.எஸ்.கே. சிலை, தி. நகர் பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை, பனகல் பார்க் எதிரே விவேகானந்தர் சிலை, பனகல் பார்க் உள்ளே பனகல் அரசர் சிலை, நான்காம் ஜார்ஜ் மன்னர் சிலை, நடிகர் நாகையா சிலை, சைதாப்பேட்டை அருகில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு என ஏறக்குறைய இருபது சிலைகளுக்கு மேல் கண்டுபிடித்து அதன் தகவல்களைக் குறித்துக்கொண்டேன். எத்தனையோ முறை இந்த இடங்களுக்கெல்லாம் போயிருக்கிறேன். ஆனால் இவற்றில் பெரும்பாலான சிலைகள் இதுவரை என் கண்ணில் பட்டதே இல்லை.

சிலையைத் தேடுவதில் வேறு சில சிக்கல்களும் இருந்தன. இரவில் நந்தனம் தேவர் சிலை அருகே நின்று சிலை பற்றிய விவரங்களை சிலைக்கடியில் இருந்த கல்வெட்டிலிருந்து பார்த்துக் குறித்துக்கொண்டிருந்தபோது ஒரு போலீஸ்காரர் வந்துவிட்டார். விவரத்தை விளக்கிச் சொன்ன பிறகுதான் போனார். நம் ஊரில் சிலை என்பது எவ்வளவு சென்சிட்டிவான விசயம் என்பதை அந்தப் போலீஸ்காரரின் படபடபிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.

ஏறக்குறைய 25 சிலைகளைக் கண்டுபிடித்துவிட்டேன். அவை பற்றிய தகவல்களைத் தேட என் புத்தக அலமாரியையும் கூகிள் தேடு பொறியையும் குடைந்துகொண்டிருந்தபோது என் நண்பர் ஒருவர் ஒரு முக்கியமான வேலையாக வடபழனி பேருந்து நிறுத்தம்வரை வர முடியுமா என்றழைத்தார். நான் கிளம்பிப் போனேன். வடபழனி விஜயா ஆஸ்பத்திரி அருகில் நாகிரெட்டி சிலை கண்ணில் பட்டது. எவ்வளவு ஆயிரம் முறை இவ்வழியாகப் போயிருக்கிறேன். இந்தச் சிலை கண்ணில் படவே இல்லையே என நொந்துகொண்டேன். அவரிடம் பேசி முடித்துவிட்டு ஏவிஎம் வழியாக சாலிகிராமம் உள்ளே திரும்பும் இடத்தில் காமராஜர் சிலை ஒன்று இருந்தது. சட்டென்று நான் திரும்பிய பக்கமெல்லாம் சிலைகளாக இருப்பதாகத் தோன்றியது. தேடுபவனே கண்டடைவான் என்ற பொன்மொழி எனக்கு நினைவுக்கு வந்தது.

வீட்டுக்கு வந்ததும் சிலைக்கான குறிப்புகளை மீண்டும் தேடத் துவங்கினேன். இது முற்றிலும் வேறு வகையான அனுபவமாக இருந்தது. பெரியார், அண்ணா, காமராஜர், என்.எஸ்.கே. கண்ணதாசன் என அவர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது மனம் சிலிர்த்தது. அறுவை சிகிச்சைக்கு போகலாம் என்று டாக்டர் சொன்ன போது கொஞ்ச நேரம் பொறுங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்தப் புத்தகத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொன்ன அண்ணா, மூத்திரச் சட்டியுடன் மேடை மேடையாய் ஏறி பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்த பெரியார் (பெரியாரின் கடைசிக் கூட்டம் தி. நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள இடத்தில் நடந்தது. அதன் நினைவாகத்தான் அங்கே சிலை அமைக்கப்பட்டுள்ளது), சாகும்போது வெறும் நூறு ரூபாயும் இரண்டே இரண்டு வேட்டியையும் மட்டுமே விட்டுச் சென்ற சென்ற தூய அரசியல் தலைவர் காமராஜர், வாழும் வரை பிறருக்குக் கொடுத்தே வாழ்ந்த என்.எஸ்.கே. என்னும் வள்ளல், வற்றாத காலம் அழிக்க முடியாத மகத்தான பாடல்களை அருவியைப் போல பொழிந்துகொண்டிருந்த கண்ணதாசன் என இவர்களின் வரலாற்றைப் படிக்கும்போது பெரும் உத்வேகம் ஏற்பட்டது.

சிலைகளின் தேடல் என் சொந்த வாழ்க்கை தொடர்பான சில நினைவுகளையும் மீட்டிச் சென்றது. எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமான சிலை ஒன்று சென்னையில் உள்ளது. அது அண்ணா மேம்பாலம் கீழே உள்ள குதிரை வீரன் சிலை. 200 ஆண்டுகளாக நடந்து வந்த கிண்டி குதிரைப் பந்தயத்தை நிறுத்தியதன் நினைவாக 1974 இல் தமிழக அரசு நிறுவிய சிலை. மதுரையிலிருந்து பிழைப்புத் தேடி சென்னை வந்த எங்கள் குடும்பம் சில வருடங்களிலே சிறப்பான நிலைக்கு உயர்ந்தது. என் தாத்தா அப்பா, சித்தப்பா வியாபாரம் செய்து அமோகமாய் சம்பாதித்தார்கள். அந்த சமயத்தில்தான் என் அப்பா குதிரை ரேஸில் சூதாடத் தொடங்கினார். அவர் பணத்தைத் தொலைத்த வேகத்தைப் பார்த்த என் தாத்தா அனைவரையும் திரும்பவும் ஊருக்கே அனுப்பிவிட்டார். ஊரிலேயே கடை, நிலம் என வாங்கிக் கொடுத்து அங்கேயே இருக்கும்படியும் செய்துவிட்டார். ஜெமினி பாலத்தருகே சிக்னலுக்காகக் காத்திருக்கும்போதெல்லாம் அந்தக் குதிரை இந்தக் கதையை எனக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். இன்று எங்கள் தந்தை எங்களோடு இல்லை. ஆனால் குதிரை சிலையைப் பார்க்கும் போதெல்லாம் என் அப்பா வாய்விட்டு சிரிக்கும் காட்சி என் மனதில் வந்து போகும்.

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!